What are you going to do Seeman? Politics

என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்? – முருகன் மந்திரம்


பந்து உங்கள் கையில். என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்?

அண்ணன் சீமானுக்கு வணக்கம்,

தேசிய கட்சிகள் என்று சொல்லப்படுவதில் ஒன்றைப்பற்றி பேசவே விருப்பமில்லை. சமத்துவத்திற்கும் தனி மனித உரிமைக்கும் எதிராக மட்டுமே செயல்படுகிற அந்த கட்சியைப்பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அது இல்லையென்றால், அவர்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை என்றால் அந்த கட்சியே இருக்காது என்பது அவர்களுக்கே தெரியும்.

இன்னொன்று அந்த கட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறொன்றையும் செய்யவில்லை. செய்வதாகவும் தெரியவில்லை. செய்வதற்கு லாயக்கிருப்பதாகவும் தெரியவில்லை. ஒன்றாமிடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு வந்து பல நாளாச்சு. இனி எந்த இடத்திற்குப்போகுமோ அது அந்தக்கட்சிக்காரர்களுக்கே வெளிச்சம். டெக்னாலஜியை வைத்துக்கொண்டு எதிராளி செய்கிற தகிடு தத்தங்களையும், தந்திரங்களையும் கூட செய்யமாட்டேன் என்று அடம்பிடித்தால், தேசத்தைக்காப்பாற்றுவது எல்லாம் இருக்கட்டும், கட்சியைக்ககூட காப்பாற்ற முடியாத நிலைக்கு வந்து விடுவார்கள் போல.

தேசியக்கட்சிகள் நிலை இப்படி என்றால், மாநிலக்கட்சிகள்…. பரிதாபம்.

தமிழ்நாடு…. அய்யோ நிலையில் ஆகி விட்டது. தமிழன், தமிழன் என்கிற கோஷங்களை தாண்டி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை சரியானவர்களோ, தவறானவர்களோ, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பின் அனைத்து மக்களின் செல்வாக்கு பெற்ற சரியான ஆளுமையும் தலைமையும் கண்ணுக்கு தட்டுப்படவே இல்லை.

தன்னையும், கட்சியையும் கட்சி டிவிக்களையும், உறவினர்களையும், சகோதர, சகோதரிக்களையும், வழக்குகளில் இருந்தும் தேசியத்திடம் இருந்தும் காக்க நினைப்பவர்கள் நிச்சயமாக நல்லதொரு தலைமையாக ஆளுமையோடு செயல்பட முடியாது. செயல்பட விடமாட்டார்கள். சந்தர்ப்பவாத அரசியலில் கொஞ்சம் மெதுவானதாக, தந்திரமானதாக, மறைமுகமானதாக அது இருக்குமே தவிர, வேறொன்றுக்கும் வாய்ப்பே இல்லை. இருந்தா நல்லாருக்கும். ஆனா என்ன செய்ய?

,தமிழ்நாட்டை காவு கொடுக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கும் பல “எஸ்”களுக்கு “நோ” சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு அரசாங்க முத்திரை மீது, தூசு படிந்து, பாசி படிந்து, போசாரை படிந்து, நூலாம்படை படிந்து, சிலந்தி வலை கட்டி இருப்பது போல தனது அட்டைப்படத்திலேயே தமிழகத்தின் பாரம்பரியமிக்க முன்னணி வார இதழ் சித்தரிக்கும் அளவுக்கு, அரசு நிர்வாகத்தின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

தாமிரபரணியில் தண்ணி எடுக்கவோ, காவிரியில் மண்ணு எடுக்கவோ, காட்டிக்கொடுத்த, காட்டிக்கொடுத்துகொண்டிருக்கும் அத்தனைக்களவாணிப்யல்களும் உங்க டமிழன் தான்.

தமிழகத்தின் நீர், ஆதாரங்கள் அனைத்தும் காணாமல் போக காரணமாக இருப்பனும் டமிழன் என்று சொல்கிற, உங்க சாதிக்காரனோ, எங்க சாதிக்காரனோ, ஏதோ ஒரு தமிழ் சாதிக்கார டமிழர்கள் தான்.

சரி, விசயத்திற்கு வருகிறேன். எனவே தமிழ்நாடு இப்போது வரப்போகிற சட்டசபை தேர்தலில், ஒரு மாற்றத்தை சந்தித்தே ஆகவேண்டும். இல்லை எனில், அய்யகோ கோவிந்தா தான்.

அ.தி.மு.க.வை கைப்பற்றி விட்டால் அதனோடு கூட்டணி வைத்து, இங்கே இருக்கிற சாதி வெறி பிடித்த கட்சிகளையும், மத வெறி கட்சிகளையும் சேர்த்துக்கொண்டால்… அது பெரிய கூட்டணி ஆகி விடும். நாம் ஜெயித்தே தீருவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் அடுத்தடுத்து அவர்கள் எண்ணங்களுக்கு பாதகமானவர்கள் அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேறு வழிகளை கையாள்கிறார்கள். வழக்கங்களை விட வேறு மாதிரியானது அது.

இங்கே இருக்கிற ஒரு சாதிக்கட்சி நீண்ட நாளாகவே மவுனமாக இருப்பது, இப்படி ஒரு கூட்டணி அமைந்தவுடன் ஓடோடிச்சென்று சேர்ந்துகொள்ளத்தான் என்பது ஊருக்கே தெரியும்.

பாவம் தளபதி, தலித் அமைப்புகளோடும் முஸ்லீம் அமைப்புகளோடும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் அவர் கூட்டணி அமைத்தால் அவர் கட்சியில் இருக்கிற சாதி வெறி பிடித்த டமிழர்கள் அத்தனை பேரும் அவர் கட்சிக்கும், அவர் கூட்டணிக்கும் ஓட்டுபோட மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். அவரும் என்ன தான் செய்வார்?

இப்படித்தான் இருக்கிறது, டமிழன் ஒற்றுமை. கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம் என்று கேரள அரசு அறிவித்ததும், இந்தியாவில் இந்தி கட்டாயம் என்று அறிவிக்கிறார்கள். கேரளாவில் மலையாளம் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையான வாழ்கிறார்கள். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இந்தி மொழி பேசும் மக்கள் தான் அதிகமாக வாழ்கிறார்களா?

இருக்கிற களவாணிப்பயலுகளையும் கசவாளிப்பயலுகளையும் துரத்தணும்னா சீமான், நல்ல சாய்ஸ்… என, ஆங்காங்கே அரசல் புரசலாக சீமானை தேர்ந்தேடுத்தால் என்ன என்று சில சகோதரர்களும் சில நண்பர்களும் பேசுகிறார்கள். அப்படியா என்ன? ஓ அப்படியும் இருக்குமா என்ற யோசனை எழவே செய்கிறது.

இன்னொரு விஜயகாந்தாகவோ, இன்னொரு வைகோவாகவோ நீங்கள் மாறிவிடுவீர்களோ என்ற பயத்திலேயே நான் நீண்ட நாள்களாக இருக்கிறேன். சரி இப்போதைக்கு அதை விடுவோம். மறப்போம்.

தமிழ் தேசியம், தனித்தமிழ்நாடு கோஷங்களை கொஞ்சம் ஓரத்தில் வையுங்கள். முடிந்தால் பரணில் போடுங்கள். ஏன் எனில் அப்படி ஒன்றுக்காக தமிழன் ஒன்று சேர்ந்தால் கூட, இன்னொரு ஈழத்தின் நிலைக்குத்தான் தமிழ்நாடு தள்ளப்படும் என்பது ஒருபக்கமிருக்க இப்போதைக்கு அது அவசியமே இல்லை என்கிறேன்.

வாட்டாள்களின் வாசமும், தாக்கரேக்கள் வாசமும், டிரம்புகளின் வாசமும் உங்களிடம் ரொம்ப தூக்கலாகவே அடிக்கிறது. மதத்தை திணிப்பதும், மதத்தை வைத்து வெறியூட்டுவதும் சமத்துவத்திற்கு எதிரானது என்றால், மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் வெறியூட்டுவதும் சமத்துவத்திற்கு எதிரானது தான். தமிழ்நாட்டில் உணர்வு உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெறி உள்ளவர்கள் அல்ல. எனவே வெறியூட்டுவதால் நீங்கள் சில எம்.எல்.ஏ.க்களை பெற்றுவிடலாம் என்று நினைத்தால் அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அதற்கு பதிலாக நீங்கள் மற்றவர்களைப்போல மத வெறியையும், சாதி வெறியையும் ஊட்டி சில இடங்களில் ஜெயிக்கலாம். அது சுலபமாக இருக்கும்.

எனவே, உங்கள் தமிழ் தேசியம், தமிழ் மொழி வெறி எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு, தமிழகம் என்கிற நிலப்பரப்பில் வாழ்கிற அனைத்து மக்களுக்கான தலைவராக உங்களை அடையாளம் காட்ட முற்படுங்கள். முனையுங்கள்.

சாதி மற்றும் மத விசயங்களில் கறாராக எந்த பக்கமும் சாயாமல், சமத்துவத்தை கடைப்பிடிக்கிற ஒருவராக உங்களை முன்னிறுத்த முற்படுங்கள்.

தமிழகத்தின் மாணவ சமுதாயம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இளைய சமுதாயமும், அனைத்து மக்களையும் நேசிக்கிறவர்களும் ஒரு புதிய தலைவனுக்கான ஏக்கத்தில், ஒரு புதிய தலைமைக்கான ஏக்கத்தில் இருக்கிறார்கள். உறுதியாக அவர்கள் இங்கே இருக்கிற எவரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இப்போதைக்கு உங்களையும் சேர்த்துத்தான்.

ஏன் எனில் எல்லோரும் ஏதோ ஒருவகையில், ஏதாவது ஒரு மோசமான கொள்கைகளை வைத்திருக்கிறார்கள். உங்களிடம் மொழி வெறியும், தமிழ் தேசியமும் இருப்பதை அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

ஆகவே, இன்னும் நிறைய காலம் இருக்கிறது உங்களுக்கு. ஓபாமாவும், டிரம்பும், மோடியும் இன்னும் பலரும் சமூக ஊடகங்களை மீடியாக்களை விட அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை விட சிறப்பாக உங்களுக்கு இன்னொன்று இருக்கிறது. உங்கள் பேச்சை கேட்க ஆவலுறும் யூடியூப் வாசகர்கள்…

அவற்றை பயன்படுத்துங்கள்…. விஜயகாந்த் போல தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக அமர்வதை முதல் குறிக்கோளாக கொள்ளுங்கள். அதை நோக்கி மிக தெளிவாக தந்திரமாக பயணப்படுங்கள். திட்டங்களை வகுத்து செயல்படுங்கள். அந்த எதிர்க்கட்சி தலைவர் குறிக்கோள் உங்களுக்கு முதல்வர் இருக்கையை தந்தாலும் மகிழ்ச்சி.

மீண்டும் ஒருமுறை…. நினைவூட்டுகிறேன்…

நீங்கள் அனைத்து மத, சாதி, மொழி பேசும் மக்களுக்கான தலைவனாக மாறினால் மட்டுமே மக்கள் தலைவனாக முடியும். நான் தமிழன், எனக்கு மொழி கிடையாது. முடிந்தவரை பல மொழிகளை கற்றுக்கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன். அதற்காக எங்கும் என் மொழியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். அப்படியே மதமும், தேசியமும் கூட.

எனவே தொண்டை கிழிய பேசிப்பேசி, கடைசியில் “நல்லா பேசுவார்” என்ற பட்டத்தை மட்டும் வாழ்நாள் சாதனையாக தக்கவைத்துக்கொண்டு, அதோடு முடிந்து போகிற வாழ்க்கையை முடித்துக்கொள்கிற ஒரு அரசியல்வாதியாக, ஒரு கட்சித்தலைவனாக இல்லாமல் அனைத்து மக்களும், அனைத்து மாநிலமும், அனைத்து தேசங்களும் உங்கள் பெயர் சொல்லும் ஒரு தலைவனாக முன் நில்லுங்கள்.

உங்கள் மீதான சிறிய நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்த கட்டுரை. உங்கள் பின்னணிகள் பற்றியும், உங்கள் அரசியல் பின்புலங்கள் பற்றியும். உங்கள் கட்சியின் கொள்கைகள் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அது இப்போதைக்கு அவசியமும் இல்லை என்று நம்புகிறேன்.
 
என்போல உங்கள் ரசிகர்கள் இன்னும் பலருண்டு. அந்த ரசிகர்களின் எண்ணிக்கை கோடிகளாகவும் இருக்கலாம். கவனிக்கவும் உங்கள் “ரசிகர்கள்”. உங்கள் தொண்டர்களோ, உங்கள் கட்சி உறுப்பினர்ளோ உங்களை பின் தொடர்பவர்களோ அல்ல. நாங்கள் உங்கள் ரசிகர்கள். உங்கள் ரசிகர்களையும் உங்கள் தொண்டர்களாக, கட்சி உறுப்பினர்களாக, உங்களை பின்பற்றுபவர்களாக வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் உங்களால் மாற்ற முடியும் என்றால், உங்களால் தமிழகத்தின் முதல்வர் இருக்கையிலும் அமர முடியும்.

முடியுமா? நடக்குமா?

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

அன்புடன்,

முருகன் மந்திரம்