Tamil Cinema

எச்.ராஜாவை எச்சரித்த விஷால்


பாஜக தலைவர்கள் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க சொல்லியதற்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுசம்பந்தமாக தனியார் டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன்’’ என்று சொல்ல, திரையுலகமே அதிர்ந்தது.

திருட்டு விசிடியை ஒழிப்பதையே லட்சியமாக வைத்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் செம கடுப்பாகிவிட்டார். மேலும் ஹெச்.ராஜாவை கண்டித்து அறிக்கை ஒன்றும் விட்டுள்ளார்.

‘’ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

ஹெச். ராஜாவுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?. உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.