Tamil Cinema

விஜய்யின் தீபாவளி படங்களின் வெற்றி தோல்வி – ஒரு பார்வை


விஜய்யின் திரை வாழ்க்கையை கு.மு.கு.பி. என்று பிரிக்கலாம். அதாவது ‘குஷி’க்கு முன் ‘குஷி’க்குப் பின். காரணம் விஜய்யின் அதுவரையிலான திரை வாழ்க்கையில் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்று வெள்ளிவிழா கண்ட பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் ‘குஷி’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் தொடர் வெற்றிகளை கொடுத்து நிஜமாகவே அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்று, வெற்றி தளபதியாக வலம் வரத் தொடங்கினார் இளைய தளபதி.

ஆதலால் ‘குஷி’ படத்திற்குப் பிறகு வெளிவந்த விஜய்யின் தீபாவளி படங்களை அலசுவது சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

  1. ‘பிரியமானவளே’

  2௦௦௦ ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீசான படம். ‘பவித்ர பந்தம்’ என்ற தெலுங்கு     ரீமேக்கான இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது ‘ராசியான ஹீரோயின்’ என்று சொல்லப்பட்ட சிம்ரன் நடித்திருந்தார். கணவன் மனைவியின் பந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, திரைக்கதையை கொண்ட இப்படத்தை செல்வபாரதி இயக்கியிருந்தார்.

  ‘தெனாலி’, ‘வானவில்’ என்று பெரிய ஹீரோக்களின் போட்டிப் படங்கள் இருந்தாலும் ‘பிரியமானவளே’ 125 நாட்கள் ஓடி நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. படத்தின் பாடல்களும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன.

  1. ‘ஷாஜகான்’

‘பிரியமானவளே’க்கு அடுத்த வருடமான 2௦௦1 தீபாவளி அன்று ரிலீசான படம்தான் ‘ஷாஜகான்’. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் படுபயங்கர ஹிட்டாகியிருந்த காரணத்தாலும், இதற்கு முந்தைய விஜய் படங்களான ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘பத்ரி’ என தொடர் வெற்றிப் படங்கள் ஹிட்டாகியிருந்த காரணத்தாலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

வளரும் ஹீரோவாக இருந்த சமயத்தில் காதலியை விட்டுக் கொடுத்த கதையில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அவர் இளைய தளபதியானவுடன் அவருக்கு ஜோடி இல்லையென்றதும் சோர்ந்து போனார்கள். விளைவு படம் தோல்வி.

ஆனாலும் ‘ஷாஜகான்’ மூலம் விஜய்க்கு ஏராளமான இளம் ரசிகர்கள் உருவானார்கள் என்பதே உண்மை.

  1. ‘பகவதி’

ஷாஜகானுக்கு அடுத்த தீபாவளிக்கு 2௦௦2-ஆம் ஆண்டு ரிலீசான விஜய்யின் ஆக்ஷன் அவதாரம்தான் ‘பகவதி’. ‘பாட்ஷா’ ஸ்டைல் திரைக்கதை கொண்ட இப்படத்தில் டீ கடை ஓனராக கலகல விஜய்யாகவும், இறுகிய முகத்தில் வன்மம் வைத்திருக்கும் தாதா விஜய்யாகவும் வெரைட்டி காட்டினார். இப்படம் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு விஜய்யின் மாஸ் பில்டப் சலிப்பை ஏற்படுத்தியதால் ஆவரேஜ் வெற்றியைத்தான் பெற்றது.

அதே தீபாவளிக்கு வெளியான ‘ரமணா’, ‘வில்லன்’ இரண்டு படங்களும் பெரிய வெற்றிப் பெற்றதும் ‘பகவதி’யின் சறுக்கலுக்கு இன்னொரு காரணம் என்று சொல்லலாம்.

  1.  திருமலை

விஜய்யின் முதல் முழு மாஸ் ஆக்ஷன் படம். விஜய்யின் ரெகுலர் கெட்டப்பை மாற்றி மீசையை மழித்து, ட்ரிம் செய்த விஜயை திரையில் காட்டி, நம்மை ஏற்றுக் கொண்டு ரசிக்க வைக்கவும் செய்தார் அறிமுக இயக்குனர் ரமணா. இப்படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டு அதில் பலத்த வெற்றியையும் பெற்றார் ரமணா.

இப்படத்தில் விஜய் பேசிய ‘’வாழ்க்கை என்பது ஒரு வட்டம். இங்க ஜெயிக்கிறவன் தோற்பான். தோற்கிறவன் ஜெயிப்பான்’’ என்ற வசனத்திற்கு ஏற்ப, முந்தைய தீபாவளியில் ‘வில்லன்’ வெற்றியாலும், ‘பகவதி’ சறுக்களாலும் கொண்டாட்டத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு பதிலடி தருவது போல் அமைந்தது ‘திருமலை’யின் மாஸ் வெற்றி. அப்போது ரிலீசான அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படுதோல்வியடைந்தது.

இந்தப் படத்திலிருந்துதான் விஜய் ஒரு முழுமையான மாஸ் ஹீரோ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ‘சிவகாசி’

2௦௦5-ஆம் ஆண்டு வெளிவந்தது இந்தப் படம். ‘திருமலை’. ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ என்று தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று விநியோகஸ்தர்களால் அழைக்கப்படுகின்ற ரேஞ்சில் இருந்த சமயம் வெளியான படமான ‘சிவகாசி’ ஆல் சென்டர் மாஸ் ஹிட்டடித்து, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு வலு சேர்த்தது.

இப்படத்தின் விஜய்யின் இன்ட்ரோ சீனும், இன்டர்வல் ப்ளாக் சீனும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மெய் சிலிர்த்து விஜயை ரசிக்க வைத்தது என்று சொல்லலாம். அம்மா செண்டிமெண்ட் ப்ளஸ் ஆக்ஷன் என்று படம் முழுக்க அதக்களப்படுத்தி, மாஸ் இயக்குனர் என்ற பெயரையும் பெற்றார் இயக்குனர் பேரரசு.

  1. ‘அழகிய தமிழ்மகன்’

2௦௦7ஆம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அஜித்தின் ‘வாலி’ போன்று ஒரு வெற்றிப் படத்தை விஜய்க்கு தர வேண்டும் என்று நினைத்த இயக்குனர் பரதனின் ஐடியா இப்படத்தில் பேக்ஃபயர் ஆனது. இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டாமல் ஒரே போன்றுதான் நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் தரப்பில் விஜய் மீது குறை சொல்லப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியை அடைந்தன. ‘ஜில்ஜில்’ ஸ்ரேயாவின் ‘கிளுகிளு’ கவர்ச்சி மட்டுமே ரசிக்க வைத்தது.  

  1. ‘வேலாயுதம்’

‘அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ என்று தொடர் தோல்வியிலிருந்த விஜய்க்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது 2௦11-ஆம் ஆண்டு வெளியான ‘வேலாயுதம்’. ‘ஆசாத்’ என்ற தெலுங்குப் படத்தை ரீமேக் செய்திருந்தார் இயக்குனர் மோகன்ராஜா. ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படத்திற்குத்தான் பிரம்மாண்ட ஓபனிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ‘’விஜய் படம்தானே ஒரு முறை பார்க்கலாம்’’ என்று ஒப்புக்கு டிக்கெட் எடுத்து உள்ளே வந்த பொதுவான ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் ‘வேலாயுதம்’. தங்கை சென்டிமென்ட், சமூகப் பற்று என்று விஜய்க்கு படம் முழுக்க தீனி போட்டிருந்தார் மோகன்ராஜா.

ஆவரேஜூக்கும் மேலான வெற்றியை பெற்று விஜய் ரசிகர்களை மீண்டும் நிமிர வைத்தது வேலாயுதம்

  1.  துப்பாக்கி

விஜய்யின் திரை வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியையும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்ற படம். விஜய்யை பிடிக்காதவர்களுக்குக் கூட விஜய்யை பிடிக்க வைத்த படம். அஜித் ரசிகர்களே மனதார வெற்றிப் படம் என்று ஒப்புக் கொண்ட படம் என்று பல சிறப்புகளை பெற்றது ‘துப்பாக்கி’. ‘ஏழாம் அறிவு’ சறுக்கலில் இருந்த இயக்குனர் முருகதாஸ் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார்.

அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் மிலிட்டரி மீல்ஸ் விருந்து கொடுத்திருந்தார் முருகதாஸ். அதுவரையிலான விஜய் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது ‘துப்பாக்கி’. இதுபோல மீண்டும் இப்படி ஒரு படம் அமையாத விஜய் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் இன்றும் ஏங்க வைக்கும் ஒரு படமாக அமைந்தது ‘துப்பாக்கி’.

  1. ’கத்தி’

‘துப்பாக்கி’ பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த இப்படம் ‘துப்பாக்கி’ ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றினாலும் வசூலில் சோடை போகவில்லை. அப்பாவி ஜீவானந்தம், அதிரடி கதிரேசன் என்று இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்து அப்ளாஸ் அள்ளினார் விஜய்.

விவசாயிகளின் அவலநிலையை அழுத்தமாக சொன்ன இப்படம் ப்ளாக்பஸ்டர் கொண்டாடியது.

1௦. ‘மெர்சல்’

ஏ.ஆர்.முருகதாஸிற்குப் பிறகு விஜய்யின் லுக் முதல் கேரக்டர் வரை வித்தியாசம் காட்டி விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்திய அட்லீ இயக்கியுள்ள படம். முதல் முறையாக மூன்று வேடங்களில் விஜய் நடித்திருக்கும் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன.

‘தெறி’ வெற்றிக் கூட்டணி என்பதால் விஜய் ரசிகர்கள் முதல் பொதுவான ரசிகர்கள் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்.

‘பிரியமானவளே’, ‘திருமலை’, ‘சிவகாசி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்று வெற்றிப் படங்கள்…

‘ஷாஜகான்’, ‘அழகிய தமிழ் மகன்’ என தோல்விப் படங்கள்…

‘பகவதி’, ‘வேலாயுதம்’ என ஆவரேஜ் வெற்றிப் படங்கள்..

இதில் ‘மெர்சல்’ எந்த கேட்டகரியில் சேரப் போகிறது என்பதை இன்னும் மூன்றே நாட்களில் தெரிந்துவிடும்.