Reviews

சீதக்காதி – விமர்சனம்


ஒவ்வொரு முன்னணி நடிகர்களும் தங்களின் 25வது, 50வது, 100வது படத்தை தங்களுக்கு பிடித்த வகையில் மிக பிரமாண்டமாக, ஒரு மைல் கல் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதியும் தன்னுடைய 25வது படத்தை தனக்கு பிடித்த வகையில் ஒரு படமாக கொடுக்க, தனது விருப்பமான இயக்குனர் பாலாஜி தரணீதரனுடன் இணைந்து சீதக்காதியாக கொடுத்திருக்கிறார். ஆனால், பிரமாண்ட, ஆக்ஷன் படமாக கொடுக்காமல், கலை சார்ந்த படமாக கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியின் திரை வாழ்வில் மைல் கல் படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தன் குழந்தை பருவத்தில் இருந்தே மேடை நாடக கலைஞராக இருக்கும் அய்யா ஆதிமூலம் மிகப்பெரிய நாடக கலைஞர். அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து, நாடகத்தில் நடிப்பதையே தன் லட்சியமாக கொண்டிருந்தவர். அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் அந்த மேடை நாடக கலைஞர், மேடை நாடகத்தை ரசிக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததை நினைத்து வருந்துகிறார். நாடக அரங்கிற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதலால் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில், தன் பேரனின் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாத கையறு நிலையில் மனம் உடைந்து போகிறார். தனது பேரன் மருத்துவ செலவுக்கு பணம் கிடைக்கும் என தைரியம் கொடுத்து விட்டு, தொடர்ந்து நாடகத்தில் நடிக்க கிளம்புகிறார். அதன் பிறகு நாடக கலை என்ன ஆனது? பேரன் மருத்துவ செலவுக்கு பணம் கிடைத்ததா? உட்பட பல விஷயங்களை மிக அழுத்தமாகவும், நாடக கலைஞர்களீன் அவல நிலையையும் திரையில் யதார்த்தத்தோடு சொல்கிறார்.

சீதக்காதி, விஜய் சேதுபதியின் 25வது படம். முதல் 40 நிமிடங்களில் மேடை நாடக கலைஞராக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இந்த 40 நிமிட நட்ப்பே படம் முழுக்க அவரை பற்றி பேச வைக்கிறது. பல்வேறு நாடகங்களில் அவர் நடிக்கும் காட்சிகள் நாடக கலைஞர்களுக்கு நெகிழ்ச்சியான தருணம். அதுவும் ஔரங்க்கசீப்பாக ஒரே ஷாட்டில் முழுக்க நடித்திருப்பது அசாதாரணமான விஷயம்.

விஜய் சேதுபதியை தவிர்த்து படம் முழுக்க தேர்ந்த கலைஞர்கள் பலர் நடித்து நம்மை ரசிக்கவும், பிரமிகக்வும் வைக்கிறார்கள். மௌலி, அர்ச்சனா ஆகியோர் பெரிதாக வசனம் எதுவும் இல்லாமலேயே நம்மை காட்சிக்குள், உணர்வுகளுக்குள் கடத்துகின்றனர். காயத்ரி, பார்வதி நாயர், ரம்யா நம்பீசன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் தாங்களாகவே வந்து தங்கள் பணியை செவ்வனே செய்து விட்டு போயிருக்கிறார்கள். பகவதி பெருமாள், இயக்குனே டீகே ஆகியோர் தங்கள் பாணீயில் ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் மிகவும் அப்ளாஸ் வாங்கும் மிக முக்கியமான இருவர் ராஜ்குமார் மற்றும் சுனில். அவர்கள் இருவரும் பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவை விருந்தே இவர்கள் தான். படம் முழுக்க தொடர்ந்து குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த் படத்தின் மிகப்பெரிய பலம். மேடை நாடக காட்சிகளை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஔரங்கசீப் நாடகத்திற்கு ஒளியமைப்பு மிகவும் பிரமாதம். சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையும், விஷுவலும் ஒன்றோடொன்று இணைந்து படத்தை மேலும் அழகாக்கியிருக்கிறது. 96 படத்தின் இசை மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட கோவிந்த் வசந்தா இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் கதைக்கேற்ற இசையை சிறப்பாக வழங்க்கியிருக்கிறார். அவன், அய்யா பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். படத்தை லைவ் சவுண்ட் எனப்படும் சிங்க் சவுண்ட் முறையில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதனை மிகச்சிறப்பாக செய்திருக்கிறது சவுண்ட் டிபார்ட்மெண்ட். நடிகர்களும் அதற்கேற்ப மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான ஒரு புதுவிதமான கான்செப்ட்டை படமாக்க நினைத்த இயக்குனரின் முயற்சி பாராட்டுக்குரியது. சீரியஸான கதையில், கதையின் பயணத்துக்கேற்ப காட்சிகளை மிக அழகாக வடிவமைத்து அனைத்து தரப்பினரும் படத்தை ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனா;உம், கதையின் மைய நோக்கம் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருப்பது மைனஸ். ஃபேண்டஸியான விஷயத்தை கதையில் புகுத்திய இயக்குனர், அதனால் கதையில் ஏற்படும் நம்பகமில்லா தன்மையை, கதையின் ஒட்டாத தன்மையை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். எனினும் நீதிபதியாக வரும் இயக்குநர் மகேந்திரன் சொல்லும் “கலை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது” என்ற வசனத்தின் மூலம் அதை நிவர்த்தி செய்திருக்கிறார்.

ஒரு சில ஏமாற்றங்கள் இருந்தாலும் இப்படி கலையை முன்னிலைப்படுத்தி ஒரு படத்தை கொடுக்க இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதற்காகவே சீதக்காதி படக்குழுவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.