seemathurai santhosh thiyagarajan mysskin Tamil Cinema

என்னைப்போல் ஒருவர், மிஷ்கின் பாராட்டிய இயக்குநர்.


என்னைப்போல் ஒருவர்,

மிஷ்கின் பாராட்டிய இயக்குநர்.

தன்னையே பாராட்டிக்கொள்ளாத இயக்குநர் மிஷ்கின், இன்னொருவரை பாராட்டுவது எல்லாம் எப்போதாவது எப்போதாவது நடக்கும் அதிசயம் தான். அப்படித்தான் சமீபத்தில் நடந்த இசைவிழா ஒன்றில், என்னைப்போல நம்பிக்கையானவர் என்று அந்த படத்தின் இயக்குநரை பாராட்டி மகிழ்வித்துள்ளார்.

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில்,  சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.

இயக்குநர் மிஷ்கின் பேசத்தொடங்கியதுமே அதிர வைத்தார்.  “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம். விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார்.  ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது என்றார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேல. ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.