Reviews

சீமராஜா – விமர்சனம்


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் வெற்றிக் கூட்டணி ஹாட்ரிக் முயற்சியில் இணைந்திருக்கும் படம் சீமராஜா. முந்தைய இரண்டு படங்களை விட அதிக பொருட்செவில் கமெர்சியல் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த கட்ட வெற்றியை அடையுமா? பார்க்கலாம்.

நெல்லைச் சீமையில் சிங்கம்பட்டி, புளியம்பட்டி என இரண்டு ஊர்கள் எதிரெதியாக இருக்கின்றன. நீண்ட நாள் பகையாக இருந்து வருகிறது. அதில் சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தின் வாரிசாக சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ராஜா வம்சத்தை சேர்ந்தவர் என்றாலும் காலத்துக்கேற்ப இருக்க வேண்டும் என்று அப்பா நெப்போலியன் நினைக்கிறார். ஆனால் மகன் சிவகார்த்திகேயன் நிறைய செலவு செய்து வருகிறார். பார்ப்பவருக்கு எல்லாம் அள்ளிக் கொடுக்கிறார். இடையில் புளியம்பட்டி சமந்தாவை பார்க்க, காதல் வயப்படுகிறார். இதற்கிடையில் விவசாயிகளின் நிலத்தை லால் மற்றும் சிம்ரன் அபகரிக்கிறார்கள். அதை சிவா மீட்டாரா? சமந்தாவுடன் ஜோடி சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் முடிந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருக்கிறார். காமெடி, நடனம், சண்டைக்காட்சி, எமோஷன் என அனைத்தையும் செய்திருக்கிறார். ஓபனிங் பாடல், மாஸ் சண்டை என ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாக அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். இன்னொரு சர்ப்ரைஸ் தோற்றத்திலும் கூட வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். இவ்வளவும் செய்த சிவகார்த்திகேயன் தன் ரேஞ்ச் எவ்வளவு பெரியதாக மாறியிருக்கிறது என்பதை உணராமல் போய் விட்டாரோ என தோன்ற வைக்கிறது. தனக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தும், கதைக்கு தேவையில்லாத விஷயங்களை பேசி கைதட்டல் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

சம்ந்தா வழக்கமான கமெர்சியல் பட நாயகியாகவே வந்து போகிறார். சிலம்பம் எதற்கு கற்றுக் கொண்டார், படத்தில் அதை சரியாக உபயோகித்தார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சிவகார்த்திகேயன், சூரி காம்பினேஷன். ஆனால் சிரிக்க வைக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். ஒரு சில இடங்களை தவிர்த்து ரசிகர்கள் தேமே என அமர வைக்கிறது காமெடி. அதிலும் சிறுத்தை புலி காமெடி எல்லாம் சோதனை.

படத்தில் நெப்போலியன், லால், சிம்ரன் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தும், எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. முந்தைய படங்களில் சத்யராஜ், ராஜ்கிரண் என வலுவான கதாபாத்திரங்களை எழுதிய பொன்ராம் இதில் சற்று தடுமாறி இருக்கிறார்.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். முந்தைய படங்களில் கேட்ட அதே பாடல்களை மீண்டும் கேட்கும் உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு இல்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு கலர்ஃபுல், கலக்கல்.

ரஜினி முருகன் படத்தில் காமெடி, எமோஷன், ஆக்ஷன், காதல் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்த பொன்ராம், இந்த படத்தில் எதை கொடுப்பது, எதை விடுவது என்ற குழப்பத்திலேயே படத்தை எடுத்திருக்கிறார். வலுவே இல்லாத திரைக்கதை படத்தில் பெரிய மைனஸ். இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது. வில்லன் கதாபாத்திரத்தை பற்றிய பின்னணி அழுத்தமாக இல்லை. மொத்தத்தில் குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்.