Reviews

சர்வம் தாள மயம் – விமர்சனம்


விளம்பரப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர் என தனி அடையாளங்கள் இருந்தாலும் சினிமாவிலும் தனக்கென, தன் படங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராஜீவ் மேனன் கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘சர்வம் தாள மயம்’. இசை சம்பந்தப்பட்ட இந்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கணும், இசை தெரிந்த ஜிவி பிரகாஷ் தான் நடிக்கணூம் என தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அப்படி உருவான இந்த படம் ரசிகர்களை குறிப்பாக இசை ரசிகர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இசை உலகில் மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு மிகவும் புகழ் வாய்ந்தவராக விளங்குகிறார். பணம், புகழ் தாண்டி கலைக்காகவே வாழ்கிறார். அவருக்கு மிருதங்கம் செய்து கொடுக்கும் கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் குமரவேல். இந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜி.வி.பிரகாஷ்க்கு இயல்பிலேயே இசை ஞானம் உண்டு. விஜய் ரசிகரான அவர், சினிமா, ரசிகர் மன்றம், தியேட்டரில் ட்ரம்ஸ் வாசிப்பது என சுற்றி வருகிறார். ஒரு சமயத்தில் நெடுமுடி வேணு மேடையில் வாசிப்பதை பார்த்து மெய்சிலிர்த்து தானும் அவரிடம் மிருதங்கம் கற்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணுவும் அவரை சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார். இது வேணுவிடம் நீண்ட நாட்களாக இருக்கும் வினீத்துக்கு எரிச்சலை தருகிறது. ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணுவிடம் இருந்து வினீத் வெளியேறுகிறார். நெடுமுடி வேணுவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில் ஜிவி பிரகாஷ், நெடுமுடி வேணுவின் சிஷ்யனாக அவரது பெயரை காப்பாற்றினாரா? அவரது இசை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

சினிமா பார்த்து ஊர் சுற்றும் ஒரு விஜய் ரசிகனாக, அதன் பிறகு இசை மீது காதல் அதிகமாகி நெடுமுடி வேணுவின் சிஷ்யனாகிவிட துடிக்கும் இளைஞனாக, காதலில் இருக்கும் இளைஞனாக, சமூகத்தின் மீதான கோபத்தை காட்டும் இளைஞனாக நடை, பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜிவியின் நடிப்பில் இந்த படம் ஒரு மைல்கல்.

வேம்பு ஐயர் என்ற மிருதங்க வித்வானாகவே வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நீண்ட நாளைக்கு பிறகு தமிழில், அதுவும் இது போன்ற நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் அவரை பார்ப்பது மிகச்சிறப்பான விஷயம். அவரின் அனுபவ நடிப்பு படம் முழுக்க வெளிப்படுகிறது. நாயகியாக அபர்ணா பாலமுரளி, ஒரு சில காட்சிகளே வந்தாலும் தன் அழகால், நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார்.

வில்லன் கதாபாத்திரம் அதனை உணர்ந்து மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் மீது அவர் காட்டும் எரிச்சல் படம் முழுக்க அவரின் கதாபாத்திரத்தை சொல்கிறது. ஜிவி பிரகாஷின் அப்பாவாக குமரவேல் ஏழைக்குடும்ப தந்தையாக மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டிடி திவ்யதர்ஷினி சின்னத்திரையில் செய்த வேலையை பெரிய திரையிலும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரவி யாதவ்வின் ஒளிப்பதிவு அபாரம். சர்வம் தாள மயம் பாடலில் இந்தியாவின் அழகான இடங்களை மிகவும் ரம்மியமாக காட்டியிருக்கிறார். ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதம். இசை சம்பந்தப்பட்ட படம், அதில் இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்குமா? ஏ.ஆர்.ரஹ்மானின் மிகச்சிறந்த இசை படத்துக்கு உயிரோட்டத்தை கொடுத்டிருக்கிறது. லைவ் ரெக்கார்டிங் முறையில் உருவான படத்தில், இசை அதை ஓவர்லேப் செய்து விடாத படி பின்னணீ இசையை அழகாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் மிகச்சிறப்பு, கதையை ஒட்டு வரும் மிருதங்கம் உட்பட கர்னாடக இசையை மிக நுட்பமாக கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.

மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களில் உறவுகளை பற்றியும், பிடித்ததை செய்யும் பேஷன் பற்றியும் பெசிய ரகுமான் இந்த படத்திலும் அதே போல விஷயங்களை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார். நம் பாரம்பரிய இசை, குரு சிஷ்யன் உறவு, சாதி ஏற்றத்தாழ்வுகள், தந்தை மகன் பாசம், ரியாலிட்டி ஷோ டிஆர்பி விளையாட்டு என பல வி‌ஷயங்களை மிக அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் திரைப்படமாக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். அவங்களுக்கு தோல் முக்கியம். நமக்கு தொழில் முக்கியம், உங்களுக்கெல்லாம் கவர்மெண்ட் காலேஜ் கோட்டால சீட்டு கிடைக்குமே, போன்ற வசனங்கள் சிறப்பு. மொத்தத்தில் இசை பற்றிய மிகச்சிறந்த ஒரு படம் தான் இந்த சர்வம் தாள மயம்.