சங்கராபுரம் வன்முறைத் தாக்குதல்… ஊமை ஊடகங்கள், உதவாக்கரை அரசாங்கம், கண்ணியமில்லா காவல்துறை, கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்! India News

சங்கராபுரம் வன்முறைத் தாக்குதல்… ஊமை ஊடகங்கள், உதவாக்கரை அரசாங்கம், கண்ணியமில்லா காவல்துறை, கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்!


சங்கராபுரம் வன்முறைத் தாக்குதல்…

ஊமை  ஊடகங்கள்,  உதவிக்கு வராத அரசாங்கம்,  கண்ணியமில்லா காவல்துறை, கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம், அகரம் சேசசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை சட்டவிரோதமாக தடுக்கும் முறையில் தேருக்கு தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.  இதில் தலித் மக்களின்  வீடுகளும் தீக்கிரையாகியுள்ளது தலித் மக்ககள் வீடுகள் அடித்து, நொறுக்கப்பட்டு அவர்கள் சொத்துகள் சூறையடி, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாதி ஆதிக்க வெறியுடன் நடத்தப்பட்டுள்ள  இந்த தாக்குதலின் பின்னால் நடந்தவற்றை பார்க்கவேண்டும்.

ஊடகங்களின் மௌனம்…

ஆதிக்க சாதியினர், நாற்காலி கனவின் உச்சக்கட்ட வெறியோடு நம்மை தூண்டி விடுகிறார்கள் என்ற உண்மை புரியாமல் சக மனிதர்களை கொலைவெறியோடு கூட்டம் கூட்டமாக சென்று தாக்குகிறார்கள். அந்த ஊர் வீடுகளை கொளுத்தி சொத்துக்களை சூறையாடுகிறார்கள். உயிர் பயத்தோடு ஊரைவிட்டு ஓடி வயல்காடுகளில் கரும்புத்தோட்டங்களில் உயிர்காத்துக்கொள்ள ஒளிகிறார்கள்.

நாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டோம் ஒருநாள் தேசப்பற்றை கொட்டிய அடுத்தநாளே இது அரங்கேறி இருக்கிறது.

இது பற்றி ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தாக்கப்பட்ட அந்த ஊரைப்பற்றிய ஒரு புகைப்படத்தையும் இணையத்தில் பார்க்க முடியவில்லை. கொளுத்தப்பட்ட தேர் பற்றிய புகைப்படங்களை பார்க்க முடியவில்.

சர்வாதிகார தாக்குதல் நடத்தப்பட்ட தமிழ் ஈழத்துக்குள் உலக ஊடகங்களைக் கூட அனுமதிக்காத ராஜகபட்சே போல …. இதன் பின்னால் இருப்பவர்கள் யார்… காட்டுக்குள்ளே இருக்கிற வீரப்பனை நேருக்கு நேராக சந்திக்கும் துணிச்சல் உள்ள எமது நிருபர்களுக்கு அகரம் கிராமத்து புகைப்படங்கள் கிடைக்கவில்லையா, எமது ஊடகங்களின் செல்வாக்கால் அதை வீடியோ எடுக்க முடியவில்லையா?

முடியும்… ஆனால் எடுக்கவில்லை… அல்லது கிடைத்தவற்றை பிரசுரிக்கவில்லை. இவ்வளவிற்கும் ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் முன்னிலையில் சமாதனக்கூட்டங்கள் நடத்தியபின்னே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

ஆக… இது சதி தவிர வேறென்ன… ஊடகங்கள் என்பவை தொழில்களாக மட்டுமே இருக்கின்றது என்பது தவிர இதன் அர்த்தம் என்ன?

கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்!

மாற்றம், முன்னேற்றம் என்று வேடிக்கை காட்டுகிற எத்தனையோ தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

சமத்துவம் பேசும் வைகோ, மேடைகள் தோறும் சீறும் சீமான், முதல்வராக ஆகியே தீருவேன் என்று அடம்பிடிக்கும் அன்புமணி, என் மகன் தமிழ்நாட்டை மாற்றுவான் என்று மார் தட்டும் அன்புமணி, அதே போல முதலமைச்சர் பதவிக்காக தி.மு.க.வுக்குள்ளே தத்தளிக்கும் ஸ்டாலின், வீரர் விஜயகாந்த், சமத்துவர் சரத்குமார், காங்கிரஸ் காவல்காரர்கள், அ.தி.மு.க, அண்ணன், கருணாநிதி, ஜெயலலலிதா எல்லாம் எங்கே போனார்கள்.

இளவரசன், திவ்யா விசயத்தில் இதுபோல ஊரைக் கொளுத்தி சொத்துக்களை சூறையாடினார்கள்.. இப்போது விழுப்புரம், சங்கராபுரம் அகரம் கிராமம். இந்த தாக்குதல்களைப் பற்றி எதுவும் பேசமுடியாத உங்களை தலைவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு திரியாதீர்கள்.

உங்கள் சுயநலம் சந்தி சிரிக்கிறது. அவ்வளவும்… இந்து கோயில்.. தேரை கொளுத்தியிருக்கிறார்கள்.  இந்த பா.ஜ.க. காரர்கள் எங்கே சென்றார்கள். தமிழிசை, இந்தி இசையெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? அது இந்து கோயில் தேர் இல்லையா?

அய்யா மோடி அய்யா… கூட்டத்திற்காக எண்ணிக்கைக்காக, கணக்கிற்காக மட்டுமே அவர்கள் இந்துக்கள்… மற்றபடி தேரை என்ன? கோயிலையே கொளுத்தினாலும் உங்கள் தமிழிசையும் பேசமாட்டார். நீங்களும் பேசமாட்டீர்கள்.

ஆக பலமும், தந்திரமும் நிறைந்த தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்க்கும், ஊடகங்களையும், உறவினர்களையும் உள்ளே அனுப்பாது… தாக்கப்பட்ட பின் சினிமாவில் வருவது போல கடமைக்கு வரும்… கூட்டமாக வந்த காட்டுமிராண்டிகளை இன்னும் 100 சுதந்திர தினங்கள் வந்தாலும் நீங்களாக கைது செய்ய மாட்டீர்கள். பின் உங்களை நம்பி எப்படி இங்கே குடித்தனம் நடத்துவது.

அதிரடி முடிவுகள் எடுக்கிற ஆளும் கட்சி, அம்மாவுக்காக கோயில் கோயிலாக சென்று அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்த பக்திப்பரவச அமைச்சர் பெருமக்களுக்கு எல்லாம் இப்படி ஒரு செய்தி தெரியவே தெரியாது.

காவல்துறையே, நீதித்துறையே, அரசாங்கமே, ஆளுங்கட்சியே, ஆளத்துடிக்கின்ற கட்சிகளே… தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிற ஜாலக்காரர்களே… உள்ளதை ஊருக்குச்சொல்லும் ஊமையாக நடிக்கின்ற ஊடகங்களே…

இந்த தொடர் வன்முறைகளைப்பற்றி நீங்கள் பேசவில்லை என்றால், உங்களைப்போன்ற துரோகிகள் எவரும் இல்லை. மனிதாபிமானத்தோடு இந்த வன்முறை வெறியாட்டங்களை அணுகுங்கள்.

சக மனிதனை, பெருங்கூட்டமாக சென்று கொலைவெறித்தாக்குதல் நடத்துகின்ற ஆதிக்க ஜாதி வெறியர்களே… நீங்கள் எந்த மதமாகவும் இருங்கள், எந்த ஜாதியாகவும் இருங்கள்… ஆனால் சக மனிதனை உங்களைப்போல நேசிக்கப் பழகுங்கள்.

எதன் பொருட்டு நீங்கள் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறீர்கள் என்தை யோசியுங்கள். அப்படித்தாக்குதல் நடத்திவிட்டதால் உங்களுக்கு என்ன இலாபம் கிடைத்து விட்டது என்று யோசியுங்கள்.

இல்லை என்றால்… உங்களுக்கும் உங்களை உசுப்பேத்தி  ஜாதி வெறியை தூண்டி விட்டு தமிழகத்தை துண்டு துண்டாக்க நினைக்கும் உங்கள் தலைவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

சதாம் உசேன்களைப் போல, பர்வேஸ் முஷ்ரப்களை போல, ராஜபக்சேக்களை போலவே உங்கள் தலைவர்களின் முடிவும் இருக்கும் என்பதை மட்டும் இரத்த வெறி பிடித்த உங்கள் நரித்தலைவர்களுக்கு சொல்லுங்கள்.

இனிமேல் தேர்களை கூட்டமாக கூட்டமாக கொலைவெறி பிடித்து நீங்கள் கொளுத்த வேண்டாம்.. அவர்களே கொளுத்துவார்கள்.

சமத்துவத்தை தர முடியாத, கடவுளைக்கும்பிடுகிற உரிமையை தர முடியாத, தேர்களும் கோயில்களும் மதங்களும் நமக்கெதற்கு என்று அவர்களே தேர்களையும் கோயில்களையும் கொளுத்துவார்கள்.

 

இந்திய அரசாங்கமே, தமிழக அரசாங்கமே, இந்திய நீதித்துறையே, தமிழக நீதித்துறையே, தமிழக காவல்துறையே… கட்சிகளே…. தலைவர்களே….. ஊடகங்களே…

தர்மபுரித் தாக்குதலுக்கு உங்களால் தீர்வு தரமுடியாது எனில்… சங்கராபுரம் தாக்குதலை நடத்தியவர்களை உங்களால் தண்டிக்க முடியாது எனில்…

போங்கய்யா… நீங்களும் உங்க இந்தியாவும்…. சுதந்திரமும் சமத்துவமும்… வெட்கக்கெடு!.

–  தமிழ் வாசகி

மனிதாபிமானத்தோடு இந்த செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்களுக்கு நன்றி. படங்கள் கூகுள் தேடலில் எடுக்கப்பட்டவை.

 

சங்கராபுரம் வன்முறைத் தாக்குதல்… ஊமை  ஊடகங்கள்,  உதவாக்கரை அரசாங்கம்,  கண்ணியமில்லா காவல்துறை, கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்!

சங்கராபுரம் வன்முறைத் தாக்குதல்… ஊமை ஊடகங்கள், உதவாக்கரை அரசாங்கம், கண்ணியமில்லா காவல்துறை, கள்ள மௌனம் சாதிக்கும் தலைவர்கள்!