Reviews

சகா – விமர்சனம்


பதின் பருவம் எனப்படும் டீனேஜ் இளம் குற்றவாளிகளின் நட்பை மையப்படுத்தி எத்தனையோ கதைகள் வெளிவந்துள்ளன. அப்படி இளம் குற்றவாளிகள், அவர்களின் காதல், பகை ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளபடம் தான் சகா. சரியாக சித்தரிப்புகள் உள்ளனவா? அனைவரையும் சென்று சேருமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சத்யா, கதிர் இருவரும் நண்பர்கள். தெருவில் சுற்றி திரிந்த அவர்களை ஒரு திருநங்கை எடுத்து வளர்க்கிறார். அம்மாவாக இருந்த அவரை கொலை செய்தவனை கொலை செய்து விட்டு சிறைச்சாலைக்கு வருகிறார்கள் இருவரும். அதே சிறையில் கங்கா என்ற ஒரு குற்றவாளியும் இருக்கிறான். அவன் சிறையில் தனி ரவுடியிஸம் நடத்த, இவர்களுடன் மோதல் ஏற்படுகிறது. அந்த மோதல் பகையாக மாறுகிறது. அது அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை.

வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்த சரண் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பக்கோடா பாண்டி ஆகியோரும் நடிக்க, வில்லனாக பிரித்வி பாண்டியராஜணும் நடித்திருக்கிறார்கள். சரண், ஸ்ரீராம் ஆகிய இருவரும் தான் நாயகர்கள். படத்தை முழுக்க இவர்கள் இருவரும் தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சரண் மிகவும் சீரியஸான கதாபாத்திரம் என்பதால்,  நடிப்பில் அவரது மற்ற பரிமாணங்களை பார்க்க முடியவில்லை. ஆனாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சரண், கிஷோர், ஸ்ரீராம் ஆகிய அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் பிரித்வி மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக ஆயிரா, அழகாக இருக்கிறார். படத்தில் நடிக்க ஸ்கோப் இல்லை, ஆனாலும் கதையில் வந்து போகிறார். பக்கோடா பாண்டி, அம்பானி சங்கர், தீனா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், இசையும் படத்தின் பிளஸ். ஷபீரின் இசையில், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. படத்தில் வரும் அந்த உடைந்த கப்பல் பின்னணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

இளம் குற்றவாளிகளையும், அவர்களுக்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் முருகேஷ். அத்தோடு இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வையும் கொடுத்திருக்கிறார்.