திருவாரூர் ,rate-and-mechins-in-agrecultur.farmer-coupl India News

வயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் விவசாய வேலைகளில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது நீடாமங்கலம் பகுதிகளில் விவசாய பணிகளில் எந்திரங்களே அதிகளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடினர். குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் சிலர் வேலை தேடி திருப்பூர், சென்னை, போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.

அப்படி செல்ல முடியாத விவசாய தொழிலாளர்கள் சிலர் வயல்பகுதிகளுக்கு சென்று எலிகளை பிடித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

நீடாமங்கலம் உழவர் சந்தை எதிரே எலிகளை கொத்து கொத்தாக கட்டி தொங்கவிட்டு விற்பனை செய்து வருகிறார்கள் ஒரு விவசாய தம்பதியினர்.

நீடாமங்கலம் அருகே புலவர்நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பன்னீர் (வயது 40), அவரது மனைவி தனம் (35) ஆகியோர் வயல்களில் எலிகளை பிடித்து கிராமப்புறங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

வயல்களில் பொந்துகளில் உள்ள எலிகளை நாங்கள் பிடிப்போம். ஒரு நாளில் 10 முதல் 15 எலிகளை வரை பிடிப்போம். 5 அல்லது 6 எலிகள் கொண்ட ஒரு கொத்தை ரூ.300-க்கு விற்பனை செய்கிறோம். எலிகளை பிடிப்பதால் பல இடையூறுகள் உள்ளன. பாம்பு போன்ற வி‌ஷ ஜந்துகளின் தொல்லைகளும் உள்ளன.

எங்களுக்கு விவசாய வேலைகள் மட்டுமே தெரியும். தற்போது வேலைக்கு ஆட்களை கூப்பிடுவதில்லை. எல்லாமே எந்திரம் மூலம் செய்து விடுகிறார்கள். இதனால் நாங்கள் வருமானத்துக்கு வழி இல்லாததால் எலிகளை பிடித்து விற்பனை செய்து வருகிறோம்.

எங்களிடம் கிராம புறங்களில் எலிகளை சாப்பிடுவதற்கும், கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காகவும் வாங்கி செல்கின்றனர். இந்த எலி விற்பனை மூலம் நாங்கள் பசியாறி வருகிறோம்.