MEYAATHA MAAN Review India News

Meyaadha Maan – Review / மேயாத மான் – விமர்சனம்


மேயாத மான்.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள மேயாதமான், ரொம்பவே ஜாலியான மானாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் அழுத்தமான மான் ஆகவும்.

காதல், காமெடி, சென்டிமெண்ட், அலப்பறை எதற்கும் பஞ்சமில்லாமல் மேயாத மான் துள்ளி ஓடுகிறது.

வைபவ்விற்கு இது செம தீபாவளி. வைபவ் மிக சிறப்பாக நடித்திருக்கும் இந்த படத்தின் அழகான இன்னொரு சிறப்பு, ப்ரியா பவானி சங்கர். தொலைக்காட்சியோ சீரியல்களோ பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை என்றாலும் எப்போதாவது சில நிமிடங்கள் தொலைக்காட்சி தொடரில் ப்ரியாவை பார்க்கும்போது மட்டும், ப்ரியாவை பார்ப்பதற்காக அந்த சீரியலில் சில நிமிடங்களை செலவு செய்ததுண்டு. பெயர் எல்லாம் வீட்டில் கேட்டுதான் தெரிந்துகொண்டேன்.

காரணங்களை அடுக்கமுடியாது என்றாலும் ப்ரியா, நான் ரசித்த நடிகைளின் பட்டியலில் ஒருவர். பெரிய திரைக்கு இவர் வரலாமே என என்னைப்போல் எத்தனை பேர் நினைத்தார்களோ, ரத்னகுமாரும் கார்த்திக் சுப்பராஜ்ம் அழைத்து வந்துவிட்டார்கள்.

ப்ரியா, முகத்தோற்றம் உடல் தோற்றம் இரண்டிலுமே பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் மாதிரி நிறைய காட்சிகளில் தோன்றுகிறார் என்பது என் கருத்து மட்டுமல்ல. படம் பார்த்த நிறைய பேரின் கருத்தும் கூட. அழகான, திறமையான நடிகையாக எங்கள் வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் ப்ரியாவிற்கு ஒரு ஸ்வீட் வெல்கம்.

இந்தப்படம் பற்றிய பேச வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாக, ரத்னகுமார், இன்னொரு ரஞ்சித் போல வடசென்னை கதாபாத்திரங்களை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கும் விதம் இருக்கிறது. அதிலும் விவேக் பிரசன்னா மற்றும் இந்துஜாவின் கதாபாத்திரங்களும் அவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகளும், நிச்சயமாக உங்களுக்கு மெட்ராஸ் படத்தின் கலையரசனையும் ரித்விகாவையும் நினைவூட்டும். விவேக் பிரசன்னாவும் இந்துஜாவும் அடித்து தூள் கிளப்புகிறார்கள். படம் பார்த்துவிட்டு வந்தபின் நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்பார்கள். நிற்கிறார்கள். வாழ்த்துகள்  இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா.

நண்பர்களின் கலக்கலும் கலாய்ச்சலுமாக நீளும் மேயாத மான் திரைப்படத்தில், இயக்குநர் ரத்னவேலின் வசனக்குத்து எல்லாம் முரட்டுக்குத்து தான்.

உதாரணத்திற்கு ஒன்று,

வைபவ், ப்ரியா வீட்டிற்கு வருகிறார். அது அய்யர் வீடு. அவருக்கு கொடுக்கப்படும் தண்ணிய வாய் வைத்து குடிக்கிறார்.

ப்ரியாவின் அம்மா:

எப்பவுமே நீங்க ஜலத்தை வாயை வச்சித்தான் குடிப்பேளா?

வைபவ்:

நீங்க எதை வச்சிக் குடிப்பீங்க.

இதைப்போல இன்னும் சில மரண கலாய்களும் உண்டு. மருத்துவமனையில் கிறிஸ்தவ பிரசங்கி ஒருவர், வினோத் என்ற பெயரை வின்சென்டா என்று கேட்பதெல்லாம் மிரட்டல் காமெடி.

இப்படியாக படம் முழுவதும் உங்களை ரசிக்க வைத்து… க்ளைமாக்ஸில் சிலபல அதிரடிகள் மற்றும் அதிர்ச்சிகளோடு காதலுக்கு மரியாதை செய்து காதல் கோட்டையும் கட்டி சுபமாக முடிகிறது.

எந்த மான் மேயாத மான்… என்பதற்கு விடை தெரிய நீங்கள் திரையரங்கிற்கு செல்வதே சிறப்பு.

பாடகர் பிரதீப்குமார் மற்றும் சந்தோஷ் நாராயணின் இசையில், விவேக்கின் வரிகளுடன் பாடல்கள் படத்திற்கு ஏத்த மாதிரி அழகாக கூட்டு சேர்ந்திருக்கிறது.

இயக்குநர் ரத்னகுமார், கார்த்திக்சுப்பராஜ் உள்ளிட்ட மேயாதமான் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.

– முருகன் மந்திரம்