Mannar Vagayara Tamil Cinema

அடிதடி சண்டை இருக்கு, ஆனா அது பாஸிட்டிவ் தான். -இயக்குநர் சமாளிப்பு


அடிதடி சண்டை இருக்கு, ஆனா அது பாஸிட்டிவ் தான். -இயக்குநர் சமாளிப்பு

என் படத்தில் வீரம், பாசம், அடிதடி சண்டை எல்லாம் இருக்கு என கூறியுள்ளார், மன்னர் வகையறா படத்தின் இயக்குநர் பூபதிபாண்டியன். ரணகளமான வெட்டுக்குத்து, கொலை எல்லாம் படத்தில் வைத்துவிட்டு அது பாசத்திற்காக குடும்பத்தில் நடக்கும் உணர்வுப்போராட்டம் என்று நீண்ட நாள்களாகவே தமிழ் சினிமாவில் சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்னொரு படமாக மன்னர் வகையறா இருக்கும் என்று தெரிகிறது. அதனால் தான் பூபதிபாண்டியன் அடிதடி சண்டையை பாஸிட்டிவ் என்று சமாளிக்கிறார் போலும்.

இதுபற்றி அவர் பேசுகையில்,

“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம்..

இந்தக்கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்த கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார். அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். இது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.. என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுளார்.

எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.