Reviews

கோலமாவு கோகிலா – விமர்சனம்


தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியை கொண்ட நாயகி தான் நயன்தாரா. பட்டத்துக்கு மிக கச்சிதமான பொருத்தம். மாயா தொடங்கி டோரா, அறம் படங்களில் தன்னால் ரசிகர்களை இரண்டரை மணி நேரம் தனது வசீகரத்தால் கட்டிப் போட முடியும் என நிரூபித்தவர். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் உட்பட ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்த அதிகாலை காட்சிகள் நயன்தாராவுக்கு வாய்த்திருப்பது தான் அவர் இத்தனை நாள் சேர்த்த சொத்து. அதிகாலை 6 மணிக்கு தியேட்டர் வாசலில் ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்றால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு இதை விட பொருத்தமான நாயகி யாராக இருக்க முடியும். அப்படி காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா நயன்தாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மிடில் கிளாஸ் பெண்ணான கோகிலாவின் அம்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய். தந்தையால் சம்பாதிக்க முடியாத சூழல். தங்கை படித்துக் கொண்டிருக்கிறாள். குடும்ப சுமையை தாங்கும் ஒரு ஹீரோவுக்கான அத்தனை சூழலும் நயன்தாரா கதாபாத்திரத்தின் மீத் தான். இந்த சூழ்நிலையில் தாயின் சிகிச்சை செலவுக்காக போதைப் பொருள் கடத்தும் வேலையை ஏற்கிறார் கோகிலா. ஒரு கட்டத்தில் அதனால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலிருந்து தன் குடும்பத்தையும் தன்னையும் எப்படி காப்பாற்றுகிறார்? அம்மாவுக்கு சிகிச்சை செய்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் நாயகி நயன்தாரா. தன் அம்மாவுக்காக, அவரை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கும் நாயகியாக தன் பாத்திரம் உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். மாயா படத்தை போல எந்த ஆதரவும் இல்லாமல் போராடும், பலமில்லாத ஒரு கதாபாத்திரம். நாயகிகளை மையமாக வைத்து படம் எடுத்தால் அது பேய் படமாக தான் இருக்க வேண்டும் என்ற முதல் விதியை ஏற்கனவே தகர்த்து விட்டார், இந்த படத்தில் புதுப்புது கதைகளை எடுத்து எந்த வித முயற்சியையும் தயங்காமல் செய்ய முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார். நயன்தாரா அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னை மெதுவாக, தெளிவாக நகர்த்தி கொண்டே இருக்கிறார். இது அவரது அடுத்த லெவல் படம். நயன்தாராவுக்கு மாஸ் கூடிக் கொண்டே போகிறது. இதில் அவர் பேசும் வசனம் அட்டகாசம்.

யோகிபாபு, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம். திரையரங்குகளில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. யோகிபாபு அடிக்கும் கவுண்டர்கள் அப்ளாஸை அள்ளுகின்றன. யோகிபாபுவுடன் வரும் அன்புதாசன் நல்ல தேர்வு. நயன்தாராவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் போல எல்லா காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். விஜய் டிவி ஜாக்குலின் நல்ல அறிமுக படம். ஆர்.எஸ் சிவாஜி, மொட்ட ராஜேந்திரன், சரவணன் உட்பட மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் கலர் டோன், பாடல்களுக்கு ஏற்ப வண்ணங்கள், டார்க் காமெடி ஜானருக்கேற்ற ஒளிப்பதிவு என சிவா ஸ்கோர் செய்கிறார். கலை இயக்குனரின் பங்கும் சிறப்பு. எடிட்டர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆடை வடிவமைப்பு நன்றாக இருந்தாலும் ஒரே மாதிரியான காஸ்ட்யூம் கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.

படத்தின் நாயகி நயன்தாரா என்றால் நாயகன் அனிருத் தான். அனிருத்தின் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ பாடல் ஏற்கனவே சார்ட் பஸ்டர். அத்தோடு எதுவரையோ பாடல் ரசிக்க வைக்கிறது. தோட்டாக்களாய் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு. பின்னணி இசையில் படத்தை அடுத்த கட்டத்துக்கு தூக்கி நிறுத்தியிருக்கிறார் அனிருத்.

போதைப் பொருள் கடத்தல் என்ற ட்ரக் மாஃபியாவை பின்னணியாக வைத்து, அதில் கதையின் மையப்புள்ளியாக ஒரு நாயகியை நடிக்க வைத்திருப்பதே இயக்குனர் நெல்சன் மெற்கொண்ட முதல் பரிசோதனை முயற்சி. அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பலம் வாய்ந்த வில்லன்கள், பலம் குறைந்த நாயகி என கதையில் ஆர்வத்தை கூட்டிய இயக்குனர் அதை ஓரளவுக்கு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். படத்தில் நயன்தாரா தவிர முக்கியமான கதாபாத்திரங்களில் பெண்கள் நடித்திருப்பது சிறப்பு. ஒரு டார்க் காமெடி படத்திற்கான எல்லா அம்சங்களும் இருந்தாலும் இரண்டாம் பாதியில் கதையின் போக்கு கொஞ்சம் மாறுவதால் சற்று தொய்வு ஏற்படுகிறது. மொத்தத்தில் நயன்தாரா தன்னுடைய சிம்மாசனம் தனக்கே என மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார்.