Reviews

காயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்


தமிழில் 36 வயதிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். மலையாள வரலாற்றில் பலருக்கும் தெரியாமல் போன, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காயம்குளம் கொச்சுன்னியின் கதையை மிகவும் சிரத்தை எடுத்து திரையில் காட்டியிருக்கிறார் ரோஷன். இந்த படத்தின் மூலம் நிவின்பாலி முதன் முறையாக ஒரு பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் கதைப்படி, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, மக்களுக்காக கொள்ளையடிக்கும் மிகப்பெரிய ராபின்ஹூட் தான் இந்த ‘காயம்குளம் கொச்சுன்னி’. ஆரம்பத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, சின்ன வயதிலேயே தன் பெற்றோரால் வேறு ஊருக்கு போய் பிழைத்துக் கொள் என அனுப்பப்படும் நிவின் பாலிக்கு, பலசரக்கு வியாபாரி எம்.எஸ்.பாஸ்கர் அடைக்கலம் கொடுக்கிறார். நேர்மையாக வாழ்ந்து வருகிறார்.

அந்த ஊருக்கு களரி பயிற்சி தர வந்த பாபு ஆண்டனியிடம் ஒரு சில காரணங்களால் பயிற்சியில் சேரமுடியாமல் போகிறது. ஒளிந்திருந்து கற்றுக் கொள்கிறார். இதை பாபு ஆண்டனி கண்டுபிடிக்கிறார். பரிசோதிக்கையில் நிவின் பாலியின் திறமை தெரிய வர, அவரை தனது முதன்மை மாணவராக ஏற்கிறார். இது அவரிடம் நீண்ட காலமாக சீடனாக இருக்கும் சன்னி வெய்னுக்கு கோபத்தையும், பொறாமையையும் உண்டாக்குகிறது. குருவிடம் கோபித்துக்கொண்டு நிவின்பாலியிடம் சவால் விட்டு விட்டு வெளியேறுகிறார் சன்னி வெய்ன். பின் அந்த ஊரின் பெரிய மனிதர்கள் சிலர், நிவின் பாலி செய்யாத குற்றத்தை சுமத்தி, திருடன் என்ற பட்டத்தை கொடுத்து, தண்டனை கொடுக்கிறார்கள். உயிர் போகும் நிலையில் இருக்கும் அவரை காப்பாற்றுகிறார் பிரபல கொள்ளையன் மோகன்லால். மோகன்லால் நிவினுக்கு பயிற்சிகள் அழித்து, அவரை நல்லதுக்காக கொள்ளையடிக்க சொல்கிறார். அதை தொடர்ந்து செய்யும் நிவின் பாலி வெள்ளைக்காரர்கள் மற்றும் அந்த ஊரின் பெரிய மனிதர்களை எப்படி சமாளித்தார்? மக்களுக்கு நல்லது செய்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆரம்பத்தில் வரும் அப்பாவி இளைஞன், பிரபல கொள்ளைக்காரன் என காயம்குளம் கொச்சுன்னியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் நிவின் பாலி. ஆக்சன் காட்சிகளிலும், களரி பயிற்சி காட்சிகளில், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் எந்த அலட்டலும் இல்லாமல் மிக இயல்பாக நடித்து ரசிக்க வைக்கிறார். தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி ரசிக்க வைக்கிறார்.

15 முதல் 20 நிமிடங்கள் வரும் ஒரு சிறப்பு தோற்றம் தான் என்றாலும் திரையை கட்டி ஆள்கிறார் மோகன்லால். அவர் வரும் காட்சிகள் அதிரி புதிரி. அவருக்கெனவே உருவாக்கப்பட்ட மாஸ் எண்ட்ரி காட்சி கலக்கல்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரியா ஆனந்த், சத்திரிய குல பெண்ணாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நிவின்பாலியுடன் காதல் காட்சிகளில் அழகு. அவமானபடுத்தி துரத்தப்படும் காட்சிகளில் கலங்க வைக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அதிர்ச்சி அளிக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் சன்னி வெய்ன். களரி குருவாக பாபு ஆண்டனி அசத்தல். கிளைமாக்ஸ் காட்சி வரை இவர் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் எதிர்பாராதது.

கலை இயக்குனரின் கடும் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவால் 18ஆம் நூற்றாண்டிற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான். கடந்த காலத்தை கண் முன் நிறுத்தும் அளவுக்கு சிறப்பான, அழகான இடங்களை தேர்ந்தெடுத்து படமாக்கி இருக்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத்தும் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். அதுவும் மோகன்லால் வரும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகளின் இசை நமக்கு எனர்ஜியை தருகின்றன.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் வழக்கம் போலவே புது களத்தில், புது ஒரு கதையை ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார். இந்த முறை அதை ஒரு பிரமாண்ட அனுபவமாக நமக்கு கொடுத்திருக்கிறார். பாபி மற்றும் சஞ்சய் ஆகியோருடன் இணைந்து வரலாற்று ஆய்வு செய்து திரைக்கதையை எழுதி படமாக்கியுள்ளார். நாம் இதற்கு முன்பு ராபின்ஹூட் படங்கள் பார்த்திருந்தாலும் இந்த காயம்குளம் கொச்சுன்னி நமக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.