Tamil Cinema

‘கருப்பன்’ – விமர்சனம்


‘ரேணிகுண்டா’ படத்தில் அறிமுகமாகி, கவனிக்க வைத்து, ‘18 வயசு’ படத்தில் தோல்வியை சந்தித்த இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘கருப்பன்’.

கதை

ஊரில் அடங்காத காளையாகத் திரியும் விஜய் சேதுபதிக்கு அவர் ஊரில் நல்ல பெயர். ஒருநாள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பக்கத்து ஊர் பெரிய மனிதர் பசுபதி தன் காளையை அடக்கினால் தனது தங்கை தான்யாவை கட்டிக் கொடுப்பதாகச் சொல்ல, காளையை அடக்கி, தான்யாவை மணக்கிறார் விஜய் சேதுபதி. தான்யாவும் விஜய் சேதுபதி நல்லவர் என்று தெரிந்ததும் திருமணம் செய்துகொண்டு விஜய் சேதுபதியின் மீது அன்பைப் பொழிகிறார். இதனால் கடுப்பாகிறார் தான்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் பசுபதியின் மச்சான் பாபி சிம்மா. தொடர்ந்து விஜய் சேதுபதியையும், தான்யாவையும் பிரிக்க அவர் செய்யும் சதிகளும், அவற்றை விஜய் சேதுபதி எப்படி முறியடித்தார் என்பதே மீதிக்கதை.

இயக்குனர் பன்னீர் செல்வம் எப்படியும் இந்த படத்தை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் இறங்கியே அடித்திருக்கிறார். பலமுறை தமிழ் சினிமா பார்த்த மினிமம் கேரண்டி கதையுடன் விஜய் சேதுபதியை இறக்கிவிட்டு, ஹிட்டடித்திருக்கிறார். என்ன கொஞ்சம் இரண்டாம் பாதி திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.

விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான படங்களையே கொடுத்து வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வழக்கமான சக்சஸ் பார்முலா படத்தில் நடித்திருப்பது ஆச்சரியம். இருந்தாலும் சீனுக்கு சீன் சிக்சர் அடித்து படத்தைத் தாங்கியிருக்கிறார்.

தான்யா. விஜய் சேதுபதிக்கே நடிப்பில் சவால் விடுவதோடு பல இடங்களில் அவரை ஓவர்டேக் செய்து நடிப்பில் ஜெயித்திருக்கிறார்.

பசுபதி பெரிய மனிதர் வேடம். கச்சிதமாகக் செய்திருக்கிறார். பாபி சிம்மா சைலன்ட் வில்லனாக வந்து, வயலண்டாக மாறி தன் கேரக்டரை நியாயபப்டுத்தியுள்ளார்.

தியேட்டரை அவ்வப்போது குலுங்க வைக்கிறார் சிங்கம்புலி.

காவேரி அழகான அண்ணி வேடம். சரத் லோகிதாஸ் வழக்கமான உறுமல் வில்லன்.

இப்படியொரு கிராமப் பின்னணிப் படத்திற்கு இமான் இன்னும் கொஞ்சம் பாடல்களை நன்றாகவே போட்டிருக்கலாம். பின்னணி இசை நன்றாகவே உள்ளது.

படத்தின் இன்னொரு பலம் சக்திவேலின் ஒளிப்பதிவு.

மொத்தத்தில்

‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் ‘கொம்பன்’.