Tamilnadu

இந்தியன் ? ! தமிழன் …..


மற்றுமொரு இந்திய சுதந்திர தின நினைவு நாள்… சில வருடங்களுக்கு முன் தீவிர தமிழ் ஆர்வலரான ஒரு சினிமா பிரபலத்திற்கு HAPPY INDEPENDENCE DAY என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தொலைபேசியில் என்னை அழைத்த அந்த பிரபலர், நான் இந்தியன் அல்ல, தமிழன் எனக்கு இதுபோல செய்தியை இனிமேல் அனுப்பாதீர்கள் என்றார்கள்…

தமிழ்நாடு… பெயரிலேயே நாடு என்ற பெயர் இருப்பதனால் தானோ என்னவோ… இந்தியாவுக்குள்ளேயே தனிநாடாக பார்க்கப்படுகிறது, தமிழ்நாடு.

முன்பெல்லாம் வடமாநிலத்தவர்கள் தான் தமிழ்நாட்டை மதிக்காத, கண்டுகொள்ளாத நிலைமை இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் சமீப வருடங்களாக, தென்னிந்தியாவில் அங்கமாக உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தவர்களே… தமிழ்நாட்டை மிகமிக துச்சமாக மதிக்கிற நிலை தொடர்கிறது.

அண்டை மாநிலத்தவர்கள் சினிமா, உணவு, டீக்கடை… என்று பலப்பல விசயங்களில் தமிழ்நாட்டில் இருந்து பல நன்மைகளை நம்மைக்கேட்காமலே அள்ளிக்கொண்டாலும்… நாம் கேட்கிற சில விசயங்களுக்குக் கூட செவி சாய்ப்பதில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட மதிக்கவே மாட்டோம் என்று அடம்பிடிக்கிற நிலையில்… இந்திய மீனவர்கள் என்று தமிழக மீனவர்களை அடையாளப்படுத்தாத நிலையில்… முல்லைப்பெரியாறுகளும், காவிரிகளும், பாலாறுகளும்… வம்படியாக மறுக்கப்படும் நிலையில்… ஈழப்படுகொலைகளை இன்று வரை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில்… தமிழினத்தலைவர்கள் எல்லாம் செத்தபின்பு சங்கு ஊதுகிற நிலையில்…
வெறுத்து, விரைப்பாக நான் இந்தியன் அல்ல, தமிழன் என்று வீராப்பு காட்டுவதில் தவறொன்றும் இல்லை தான்…ஆனால் பாரதியார் இன்றிருந்தால்,,, ரௌத்திரம் பழகு, கூடவே யதார்த்தம் பழகு என்றும் சொல்லியிருப்பார்.

தனித்தமிழ்நாடு என்பது வீராப்போடு பேசிச் செல்வதற்கு, கொடி பிடிப்பதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் யதார்த்தம் வேறு.
இந்தியாவின் தெற்கு எல்லையாக தமிழகம் இருக்கும் நிலையில், இந்திய கடல் எல்லைகளில் தெற்கும் கிழக்கும் தமிழ்நாட்டுக்குள்ளும் இருக்கும் நிலையில்… இந்தியா தமிழகத்தை தனிநாடாக்குவது என்பது எந்த ஜென்மத்திலும் நடக்காது.

அப்படியே ஒட்டு மொத்த தமிழர்களும் ஒற்றுமையாக(?!) தனிநாடு கேட்டு போராடினாலும் இந்தியாவுக்குள்ளே ஒரு ஈழமாக தமிழ்நாடு மாறுவதைத்தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிட வாய்ப்பில்லை.

மகன்களுக்காக மாசக்கணக்கில் தங்கோ, தங்கென்று தங்கி இருந்து ஒட்டு சேகரிப்பவர்களும், மகன்களாலேயே மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் தலைவர்களும், எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதும்… எதையும் என்ன என்று கேட்கக்கூடாத திராணியில்லாமல் திரிகின்றவர்களும்… உங்களுக்காக ஒன்று சேர்வார்கள் என்று கனவிலும் நினையாதீர்கள்.

ஆக, நீங்கள் உங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் நேஷனாலிட்டி என்ற அடிப்படையில்… நீங்கள் இந்தியர் இல்லை என்று நீங்களே நினைத்தாலும் சொல்லமுடியாது. அப்படி ஒருவேளை நீங்கள் ஆவணங்களோடு நிருபித்துவிட்டால் இந்த நாட்டில் நீங்கள் வாழ தகுதியற்றவராக ஆகிவிடுவீர்கள்.

ஆக தேவை, யதார்த்தம் பழகும் சாமர்த்தியம். பல்லாயிரம் கோடிகளில் ஊழல் செய்ய துணையாக இருக்க முடிகிற ராசாக்களையும், இந்தியாவின் நிதி அமைச்சர்களாக வலம் வர முடிகிற சிதம்பரம்களையும்… கட்டுப்படுத்தும் ரிமோட்களாக நீங்கள் மாறவேண்டிய யதார்த்தம்.

தலைமைச் செயலகத்தை மாற்றுவது என்றாலும்,தனியார் பள்ளிகள் என்றாலும், ரியல் எஸ்டேட் என்றாலும், டாஸ் மாக் என்றாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் என்றாலும்… ஊடக சர்வாதிகாரம் என்றாலும்… அதை தீர்மானிப்பவர்களாக அரசியலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருக்கிற சூழ்நிலையை மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக மக்கள் மாறவேண்டும்.

டீக்கடைகளிலும், சலூன்களிலும், சோசியல் வெப்சைட்டுகளிலும் காலைக்கடன் கழிப்பதைப்போல தன் பங்குக்கு அரசியல் பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டிருந்தால்…. எதுவும் உங்கள் கையில் இருக்காது.

வேண்டிய போராட்டங்களை கண்டுகொள்ளாமலிருப்பதும், வேண்டாத போராட்டங்களை ராஜதந்திரங்களின் உதவியோடு அடக்குவதும் அரசியலுக்கு புதிதான விசயமல்ல. ஒட்டுமொத்த குரலில் ஓரணியில் நிற்க பழகாமல் எதையும் சாதிப்பது சாத்தியமே இல்லை.

நன்மைகளுக்கு ஆதரவாக ஓரணியில் நிற்பதாக இருந்தாலும், நல்லன அல்லாதவைகளுக்கு எதிராக ஓரணியில் நிற்பதாக இருந்தாலும்… நம்மிடைய நடந்த வரலாறுகளே இல்லை.

தனித்தனியாக புலம்பிவிட்டு, தனித்தனியாக கலைந்து செல்லும் மக்களின் மனதில் போராட்டங்களைக் கூட கட்சிக்காரர்கள் தான் செய்யவேண்டும் என்பது பதிந்துவிட்டது.

இந்திய தேசிய அரசியலில் தமிழகத்தின் பங்கு என்பது அப்படி ஒன்று மிகச் சாதாரண விசயமில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே அது பவர்ஃபுல்லாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது.

அந்த பவரை ஃபுல்லாக தங்கள் குடும்பங்களையும் வாரிசுகளையும் வளர்ப்பதற்கும் தங்கள் சுயநல விருப்பு, வெறுப்புக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் உங்களை பயன்படுத்தி அரசியல் செய்பவர்கள் தான் உங்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நீங்கள் அதை செய்ய வைக்கவேண்டும்.

மாநிலமாக இருந்தாலும் தேசியமாக இருந்தாலும் மக்கள் தான், தங்களுக்கு தேவையானதை செய்ய வைக்கவேண்டும்.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும், வைரத்தை வைரத்தால் அறுக்கவேண்டும்… என்று சொல்லப்படுவது போல மக்களும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிற தந்திரங்களைக் கற்றுக்கொள்ளாமல், கையாளாமல் இந்தியன், தமிழன் என்று முறைப்புக் காட்டுவதெல்லாம் ஒரு டீ குடிக்கக் கூட தேறாது என்பதே நிஜம்.

இந்த சுதந்திரதினத்தில் இருந்து மக்கள், அரசியலையும், அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களைவும்… தந்திரமாக கையாள கற்றுக்கொள்ள வாழ்த்துவோமாக.

தந்திரங்களை கற்றுக்கொள்வது என்பது ஓரணியில் நிற்பது, உறுதியாக இருப்பது, தேவையானவற்றை முறையாகக் கேட்கப்பழகுவது… தேவையானவற்றை உரிமையாகக் கேட்கப்பழகுவது, உரிய சட்டங்களோடு கேட்கப்பழகுவது தவிர வேறில்லை.

நீங்கள் தமிழனாக இருந்தாலும் இந்தியனாக இருந்தாலும் இது உங்களுக்கும் பொருந்தும்.