Caste Love Murders கட்டுரைகள்

அனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…


ஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும் குழு மனப்பான்மைக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிராக திரும்பிவிட்டதைப்போல, திருப்பி விடப்பட்டதைப்போல அவமானமும், கேவலமும் மனித வரலாற்றில் வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

மண், பெண், பொன்… இதற்காகவே காலங்காலமாக மனிதர்கள் அடித்துக்கொண்டதாக கேள்விப்படுகிறோம். ஆனாலும் அவற்றோடு இனிமேல் மேற்சொன்னவற்றையும் சேர்த்தாக வேண்டும்.

இதில் மற்றவை… உயிரற்றவை… இந்த உயிரற்றவைகளோடு பெண்ணையும் சேர்த்த மனிதனைப்பற்றி என்ன சொல்ல… பெண் என்பவள் சொத்தாக, பாவிக்கப்படும் வரை… அவளும் அக்றிணை தான் போலும்.

சமீப காலமாக, தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நிகழும் கொலைகளை விட அதிகமான கொலைகள், ஜாதிக்காதல்கள் என்ற பெயரால் நிகழ்கிறது. நிகழ்த்தப்படுகிறது. அதற்காகவே பல புனித ஆத்மாக்கள் ஊர் ஊராக கூட்டம் போடுவதும்… நிகழ்கிறது.

எந்த ஜாதிப்பக்கமும் நிற்காமல் இந்த செய்திகளை படித்தாலே செம கடுப்பாகிறது. IRRITATIING. இங்கே பெண்தான் ஜோக்கர், காரணம், அந்தக்கொலைகளுக்காக சொல்லப்படுகிற முக்கிய காரணம்…

அந்த ஜாதிக்காரப் பையன்கள் எங்களைப்போன்ற ஜாதிக்காரப்பெண்களின் வயிற்றில் அவர்களின் கருவை விதைக்கவே காதலிப்பது போல நாடகமாடுகிறார்கள். ஆகவே அவர்களைக்கொல்கிறோம் என்கிறார்கள். அவர்களைக் கொல்வோம் என்கிறார்கள். கொல்லச் சொல்வோம் என்கிறார்கள்.

அட அறிவாளிகளே… கருவறைகள் என்ன கவர்மெண்ட் கக்கூஸா? வந்தவன் போனவனெல்லாம் பயன்படுத்த…

உங்கள் ஜாதிப்பாசத்தை காட்டுவதற்காக பெண்களைக் கேவலப்படுத்துகிறீர்கள்… கருவறைகளை கொச்சைப்படுத்துகிறீர்கள்… பெண் உடலிலும் மனதிலும் ஆணைவிட பலமானவள்…

அப்படியே இல்லை, அந்த ஜாதிப்பையன்கள் இந்த ஜாதிப்பெண்களை மயக்குகிறார்கள்… என்றால்… அந்த பேச்சுக்கெல்லாம் இந்த ஜாதிப்பெண்கள் மயங்கிப்போவதாக சொல்வது இன்னும் அவமானம்…

எல்லா ஜாதிப்பெண்களுக்கும் சொல்கிறேன்… கேளுங்கள்… உங்களை அவ்வளவு எளிதில் யார் வேண்டுமானாலும் மயக்கி விட முடியுமாம்… உங்கள் வயிற்றில் கரு விதைத்து விட முடியுமாம்? எவ்வளவு கேவலமான, உண்மையில்லாத கற்பனை… பெண்கள் குறித்து எவ்வளவு மட்டமான மதிப்பீடு…

அப்படியே அவர்கள் மயக்குகிறார்கள்.. இவர்கள் மயங்குகிறார்கள்… அது உண்மை தான் என்று சாட்சியங்களோடு உறுதிசெய்யமுடியும் என்றால்… இதுவரை மயங்கிய பெண்களின் பட்டியலையும், விதைத்த பின் அறுக்கப்பட்ட/கலைக்கப்பட்ட கருக்களின் பட்டியலையும், விதைத்து வளர்ந்துகொண்டிருக்கிற பட்டியலையும், விதைத்து வளர்ந்து பிறந்துவிட்ட பட்டியலையும் வெளியிட முடியமா?

என்னதான் நெட் ரிசல்ட் என்று தெரிந்து கொள்வோமே? அப்படியே எப்பேர்ப்பட்ட பெண்களையும் மயக்கும் திறமை வாய்ந்த அசகாயசூரர்கள் இங்கே பலர் இருப்பது உண்மை என்றால்…  அவர்களை வேறு எங்காவது பயன்படுத்திக்கொள்வோமே…

மன்னித்துக்கொள்ளுங்கள் பெண்களே… ஜாதிப்பெயர் சொல்லி பணம் பறிக்கவும்…பதவிகளைப் பெறவும்… அதிகாரத்தை கைப்பற்றவும்… எவ்வளவு லாவகமாக, எவ்வளவு புத்திசாலித்தனமாக, எவ்வளவு நுட்பமாக உங்களை / பெண்களை ஜாதிக்குள்ளே சேர்த்து பயன்படுத்துகிறார்கள்…

கடைசியாக என் கவிதைத்தோழிகளின் கோபத்தை கடன் வாங்கி, ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

இதுவரை “அந்த” வகையான ஜாதிப்பெண்களின் “யோனி”களோடு, கருவிற்காக!!!!???? இல்லாமல் காமத்திற்காக மட்டுமே புணர்ந்த “இந்த” ஜாதிக்காரர்களின் “குறி”களுக்கு சொந்தக்கார ஆண்களின் குடும்பத்தையும் தலைமுறையினரையும் என்ன செய்யலாம்? ஊரை விட்டு ஒதுக்கி வைக்கலாமா? ஒரேயடியாக குழிதோண்டி புதைத்துவிடலாமா?

ஏன் என்றால் “ஜாதிப்புனிதம்” , “ஜாதிப்பெருமை” முக்கியமல்லவா? அதில் சுத்தம், அசுத்தம், பாவம், புண்ணியம், தீட்டு… எல்லாம் இல்லையோ என்னவோ?

அந்த ஜாதி, இந்த ஜாதி என்றெல்லாம் கணக்கு வைக்க விரும்பவில்லை. கறைப்படுத்தப்படுகிற கருவறைகளுக்கும், காயப்படுத்தப்படுகிற இதயங்களுக்கும் சொந்தமான எல்லா ஜாதிப்பெண்களின் காலடியில், அந்தத் தியாகக் தாய்களின் திருவடிகளில் உங்கள் அனைவரின் சார்பாகவும் நான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேனடா… மடையர்களே… கொடியவர்களே!

தாய்களால் பிறந்த மனிதர்களாக உங்களை நீங்கள் உணர்ந்தால், மனிதாபிமானத்தோடும் மனசாட்சியோடும் என்னோடு மன்னிப்பு கேட்க உங்களையும் அழைக்கிறேன்.

பாவத்தை கழுவிக்கொள்ளத்தான்… வேறெதற்கு?

–    TAMIL NEWS NOW

 

 

Caste Love Murders

ஜாதிக்காதல் கொலைகள்…