Tamil Cinema

‘பயமா இருக்கு’ – விமர்சனம்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பேய் படம்தான் பயமா இருக்கு. இந்தப் படத்தில் சந்தோஷ், ரேஷ்மி மேனன், பரணி, ஜெகன், லொள்ளு சபா ஜீவா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கதை

சந்தோஷ், ரேஷ்மி மேனன் தம்பதி கேரள எல்லைப்பகுதியில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். மனைவி ரேஷ்மி மேனனின் தாயை தேடி கணவன் சந்தோஷ் இலங்கைக்கு செல்லும் நேரத்தில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார் ரேஷ்மி. இலங்கை போரில் ரேஷ்மியின் அம்மா இறந்துவிட்ட தகவல் அறிந்து ஊர் திரும்பும் வேளையில், இலங்கை ராணுவத்திடம் துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்ட ஜெகன், ராஜேந்திரன், லொல்லு சபா ஜீவா, பரணி ஆகிய நான்கு பேரையும் காப்பாற்றி தன்னுடன், தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். இந்நிலையில், அவரது நண்பர்களுக்கு ரேஷ்மி மேனன் இறந்து பேயாக, இந்த வீட்டில் சந்தோஷுடன் இருக்கிறார் என தோன்றுகிறது. சந்தோஷை அந்த பேயிடம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
பேய் ஓட்டும் கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்கள். சந்தோஷை காப்பாற்றினார்களா? ரேஷ்மி உண்மையிலேயே இறந்து விட்டாரா? யார் பேய்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அன்பான கணவனாகவும், நல்ல நண்பனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் சந்தோஷ். அன்பான, கணவன் மீது காதல் கொண்ட ஒரு குடும்பப் பெண்ணாக ரேஷ்மி மேனனின் நடிப்பு சிறப்பு.

ஜெகன், லொல்லு சபா ஜீவா, பரணிமொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் செய்யும் காமெடியால் தியேட்டரே குலுங்குகிறது.

சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் கேட்கும் ரகம். மகேந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் ஆகச்சிறந்த விஷயம். அந்த ஆற்றங்கரை, தனி வீடு, இலங்கை பின்னணி காட்சிகள் அனைத்திலும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதிலும் இரவுக் காட்சிகள் அபாரம்.

பேய்ப் படமாக இருந்தாலும் பிசாசு போன்று பேய்க்கும் நல்ல மனம் இருப்பதாகக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு நிச்சயம் சபாஷ் போடலாம்.

மொத்தத்தில்

‘பயமா இருக்கு’ – நல்லா இருக்கு.