ஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். Victor Doss Kavithai கவிதைகள்

ஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். – கவிதை – விக்டர்தாஸ்


இந்த பூமி…
கலவையான பிரதேசம்.
இங்கே…
பறவைகள், விலங்குகள், பூச்சிகளோடு
மனிதர்கள் விரவிக் கிடப்பது பேரதிசயம்.

எல்லா உயிர்களும்
தங்கள் உணர்வுகளை
ஒலிகளின் உதவியால் மட்டுமே
பரிமாறிக்கொள்கிறது…

ஆனால், மனிதன் ஒருவன்தான்
ஒலிகளை சமிக்ஞையாக்கினான்.
சமிக்ஞைகளை மொழியாக்கினான்.

மொழிகளை இயலாய்,
இசையாய்,
நாடகமாய்,
அறிவியலாய்,
விஞ்ஞானமாய்
மற்றும் கணினியாய்
எழுத்துக்கள் மூலம் ஏணி போட்டு
ஏறி அமர்ந்து கொண்டான்.

இந்த எழுத்துக்கள் தான்
உலக அறிவை நூல்களாக
இறக்குமதி செய்து வைத்திருக்கிறது.

அகத்தியனை தொல்காப்பியனை
அக புற நானூறை
சங்கப்பாடல்களை
கம்பனை
வள்ளுவனை
இளங்கோவனை
சேக்கிழாரை
திருத்தக்கத் தேவரை
வில்லிபுத்தூராரை
அவ்வையை
வள்ளலாரை
பாரதியை
பாரதி தாசனை
எங்கள் கண்ணதாசனை
இன்று வரை சுமந்து திரிவது
இந்த எழுத்துக்கள் பயிர் செய்த
நூல்கள் என்பதை மறத்தல் ஆகா!.

நூல்கள் நம் புலன்கள் துலக்கும்,
நூல்கள் நம் அறியாமைத் துருவெடுக்கும்,
நூல்கள் நம்மைப் புதிதாக்கும்,
நூல்கள் நம் ஆறாம் அறிவின் சாளரம் திறந்து
ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும்.

நூல்கள் உள்ளொளி பெருக்கும்.
மாசு தூசு பகைமை
மூடநம்பிக்கை இருட்டு அவநம்பிக்கை
அழுக்கு இழுக்கு
இப்படி அனைத்து குப்பைகளையும்
ஒற்றைத் தீக்குச்சியாய் எரித்துப் போடும்
உண்மையை உரித்துப் போடும், நூல்கள்.

நூல்கள் உங்களுக்கான சாலை போட்டுத் தரும்,
நூல்கள் வாழ்க்கை வண்டி ஓட்டவும் கற்றுத்தரும்,

நூல்கள் வாசிப்பு,
உங்கள் மூளைக்குள் உண்டான
முட்புதர்கள் வெட்டி எடுக்க பயிற்சி தரும்.

நூல்கள் வாசிப்பு.
உலக உருண்டை அள்ளி
உள்ளங்கை ரேகையாய் உடுத்திக் கொள்ளும் முயற்சி தரும்.

நூல்கள் வாசிப்பு,
நிகழ்காலத்தில் இருந்தபடி
இறந்த காலத்தில் வாழும் வசதி தரும்.

நூல்கள் வாசிப்பு,
எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்சிஜனை
இப்போதே இதயப் பைகளில் நிரப்பிக் கொள்ள
நேர்வழியைக் காட்டும்.

நூல்கள் வாசிப்பு
நிகழ்கால நிமிடங்களை
தங்க ஜரிகைகளால் ஆடைகட்டி அழகு பார்க்கும்.
நூலறிவு,
வயதில் முதிர்ந்தவர்கள் முன் கூட
தலை நிமிர்ந்து அமர வைக்கும்.

நூலறிவு,
பணிவு கனிவு பண்பு
அமைதி அடக்கம் ஆற்றல்
அனைத்தையும் இழுத்து வந்து
உங்களைச் சான்றோர்கள் என
ஆன்றோர்களைச் சொல்ல வைக்கும்.

காற்றை வாசிக்காமல்
மூங்கில் ஆவதில்லை புல்லாங்குழல்

தண்ணீரை வாசிக்காமல்
தாவரங்கள் தருவதில்லை பூக்கள்

சூரியனை வாசிக்காமல்
வெளிச்சம் பெறுவதில்லை நிலா

மழையும் வெயிலும்
ஒன்றை யொன்று வாசிக்காமல்
வருவதில்லை வானவில்

ஆக
வாசிப்பு பசிப்படுத்தும்
வாசிப்பு ருசிப்படுத்தும்
வாசிப்பு வசப்படுத்தும்
வாசிப்பு நிசப்படுத்தும்

சில புத்தகங்கள் காதலி மாதிரி….
எப்போதும் பார்க்க வைக்கும்

சில புத்தகங்கள் ஆசிரியர் மாதிரி….
பார்த்தாலே பயங்காட்டும்

சில புத்தகங்கள் முகநூல் பெண்கள் மாதிரி….
புரிந்து கொள்ள சிரமப்படுத்தும்

சில புத்தகங்கள் டாஸ்மாக் மாதிரி…..
அந்தப் பக்கம் கூட போகக் கூடாது

சில புத்தகங்கள் பேப்பர் தட்டு மாதிரி….
ஒரு தடவை மட்டுமே பயன் படுத்தலாம்

சில புத்தகங்கள் அம்மா மாதிரி…
சாகும் வரை வைத்துக் கொள்ள வேண்டும்

பாரதியை மட்டும்
இந்த தமிழ் தேசம் வாசியாது போயிருந்தால்
பெண்ணுரிமைக் குரல்கள்
இந்த அளவுக்கு ஒலித்துக் கொண்டிருக்குமா
என்பது ஐயுறு வினா

பாரதி தாசனை

இந்த தமிழ் தேசம் வாசியாது வந்திருந்தால்
சாதிக்கெதிரான குரல்
இவ்வளவு சப்தமாக கிளம்பியிருக்குமா
என்பது கேள்விக்குறி

அம்பேத்கரும் பெரியாரும்
இந்தச் சமூகத்தை
சரியாய் வாசிக்காமல் விட்டிருந்தால்
இன்னும் வர்ணாசிரம வர்க்க பேத வகுப்பு வாதங்கள்
வாழ்ந்து கொண்டு தானே இருந்திருக்கும்

பலவும் படித்தால் பண்டிதன் ஆவான்
என்பது ஒரு தொன்ம மொழி

அதுபோல் வாசிக்க வாசிக்க
நம் அறிவு பிரகாசிக்கும்

சமகாலத்திய நிகழ்வுகள்
புரவிப் பாய்ச்சலாய் இருக்கிறது
அதன் வேகத்திற்கு றெக்கை கட்டிப் பறக்க
வாசிப்பு அவசியம்

விஞ்ஞானம் கணிப்பொறி
உளவியல் உலகவியல்
பெண்ணியம் சாதியம்
இவைகளின் வேர்மூலம் அறிய
நூல் வாசிப்பு ஒன்று தான்
நுண்மாண் நுழைபுல நுட்பம் கற்றுத்தரும்

பழந்தமிழ் நூல் படியுங்கள்
ஆழ்வார்கள் நாயன்மார்கள்
குறுந்தொகை எட்டுத்தொகை பத்துப்பாட்டு
நக்கீரன் நன்னூல் நற்றிணை
இனிக்க இனிக்க யாவும் வாசியுங்கள்

பண்டைய வரலாறு படியுங்கள்
இயற்கை வளம் பேசும் எழுத்து படியுங்கள்
நிலம் நீர் காற்று தீ ஆகாயம்
ஐம்பூதங்களின் அற்புதம படியுங்கள்

புதுமைப்பித்தன் பட்டுக்கோட்டை
கார்ல்மாக்ஸ் ஏங்கல்ஸ்
ஸ்டாலின் லெனின் ஜீவா
உழைப்பவனுக்காக குரல் கொடுத்த
உன்னதர்களின் எழுத்து படியுங்கள்

தனியொரு மனிதனாய்
இந்த சமூக அவலங்களுக்கெதிராய்
சாட்டை சுழற்றிய ஜெயகாந்தன் படியுங்கள்

கவிதையென்றால்
எப்படி இருக்க வேண்டும் …..
எங்கள் கவியரசர் கண்ணதாசன் படியுங்கள்

நவீன எழுத்தின் நர்த்தனம் உணர
சுஜாதா படியுங்கள்

திரைப்பாட்டில் வர்ண மொழி மழை
ஊற்றிச் சிதறடிக்கும்
வைரமுத்து படியுங்கள்

வண்ணதாசன் நாஞ்சில் நாடன்
ஜெயமோகன் சாருநிவேதா
விக்ரமாதித்யன் ராமகிருஷ்ணன்
மாலதி மைத்ரி குட்டி ரேவதி வெண்ணிலா
குகை மா புகழேந்தி சக்தி ஜோதி
இன்னும் பல பல பல லட்சம் எழுத்தாளர்கள்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
இவைகள் யாவும் வாசியுங்கள்

அந்த தூரச் சூரியன்
உங்கள் தோளில் அமரும்
ஆகாயம் உங்களை
அண்ணாந்து பார்க்கும்

வாசியுங்கள்
வாசியுங்கள்
வான் மீன்களின் எண்ணிக்கையை தாண்டி
நூல் வாசியுங்கள்

யோசியுங்கள்
யோசியுங்கள்
போரற்ற பூமி
நீருள்ள கிரகம்
கார்பன் இல்லா காற்று
மரங்கள் ததும்பும் மண்
இப்படி ஒரு ரம்மியச் சூழலை
நீங்கள் படித்த பட்டறிவு கொண்டு
இங்கேயே சிருஷ்டிக்க முடியுமா என யோசியுங்கள

நேசியுங்கள்
நேசியுங்கள்
எல்லா உயிர்களையும்
தன்னுயிர் என கருத
நூல் தந்த ஞானம் கொண்டு
இன்று முதலேனும் நேசியுங்கள்

அப்போது தான்
உணர்வீர்கள்
வாசிப்பின் உயிர் கனம்
எழுத்தின் ஆத்ம பலம்

நானும் வாசிக்கத் தொடங்குகிறேன்
இன்னொரு முறை
ஆனா ஆவன்னாவில் இருந்து……

– விக்டர்தாஸ்